பிறந்த வருடம் : ஜூலை 30, 1886.
பிறந்த இடம் : திருக்கோகர்ணம் (புதுக்கோட்டை மாவட்டம்).
பெற்றோர் பெயர்கள்: தந்தை – நாராயணசாமி மற்றும் தாயார் – சந்திர அம்மாள்.
கல்வி : சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்றார்.
விருதுகள் : பத்ம பூஷன்.
தொடங்கிய நிறுவனம் : புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் – அடையாறு (சென்னை).
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள்:
பிறந்த வரலாறு – புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886 ஆம் ஆண்டு நாராயணசாமி மற்றும் சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தவர் தான் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி. இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். தாயார் பிரபல பாடகர். தந்தையார் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் தாயார் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆகையால் இவ்விருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆகையால் கடும் சமூக எதிர்ப்புகளுக்கு இடையில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துலட்சுமி ரெட்டியின் உறவுக்கார ஜெமினி கணேசனின் சுயசரிதை:
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் சின்ன தாத்தா (தாத்தாவின் தம்பி) முத்துலட்சுமியின் அப்பா. ஆக ஜெமினி கணேசனுக்கு முத்துலட்சுமி அத்தை முறை. ஜெமினி கணேசன் மீது அன்புகொண்ட முத்துலட்சுமியின் அப்பா, இறக்கும் முன்பு ஜெமினி கணேசனுக்கும் சில சொத்துக்களை எழுதி வைத்து கார்டியனாக முத்துலட்சுமியை நியமித்தார் என்று ஜெமினி கணேசன் தமது சுயசரிதையில் எழுதி இருப்பார்.
முத்துலட்சுமி ரெட்டியின் கல்வி பருவம்:
பெண் கல்விக்கு அதிக எதிர்ப்புகள் இருந்த அந்த காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே படித்து தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர் தான் முத்துலட்சுமி ரெட்டி. அதன் பிறகு மெட்ரிக் தேர்வில் தேறிய முத்துலட்சுமி இன்டர்மீடியட் படிக்க புதுக்கோட்டை மகாராஜா கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பமே சலசலப்பை உருவாக்கியது என்பது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சலசலப்பு உருவாக்க என்ன காரணம் என்றால் அதுவரை மகாராஜா கல்லூரியில் ஒரு பெண் படித்ததில்லை. ஆகவே அவர் பிற ஆண் மாணவர்களின் படிப்பு கெட காரணமாக இருப்பார் என்பதை மனதில் கொண்டு அந்தக் கல்லூரியின் முதல்வர் கருதினார். ஆனால் மகாராஜா பைரவ தொண்டைமான் தலையிட்டு அவர் படிக்க அனுமதி தந்ததோடு கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது. படிப்பில் வெற்றி பெற்ற பிறகு சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கல்வி தடைபட்டது. மேலும் அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்து போனார். அதன் கொடுமைகளையும் நேரில் அனுபவித்ததால் மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து 1907ஆம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி ரெட்டி சிறந்து விளங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சான்றிதழ்களும் தங்கப் பதக்கங்களும் பெற்று 1912ஆம் ஆண்டு நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை பெற்றார்.
முத்துலட்சுமி ரெட்டியின் திருமண வாழ்க்கை முறை:
திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது இருப்பினும் சகோதர மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி. அவருடைய கணவர் டி.சுந்தர ரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் அம்மையார் ஆல் நிறுவப்பட்ட பிரம்ம ஞான சபையில், மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றை தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும்,சுந்தர ரெட்டிக்கும் திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இரண்டு மகன்களில் மூத்த மகன் ராம் மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய் – தந்தையை போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிறுவனராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட மேலவை உறுப்பினராக டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பங்கு:
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி 1927ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார். அப்போது கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பொட்டு கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் “தேவதாசி முறையை” ஒழிப்பதற்காக சட்ட மசோதாவை முன்மொழிந்து அதற்கென வாதிட்டார். இந்த மசோதாவை 1947ஆம் ஆண்டு சென்னை “தேவதாசி சட்டம்” என்ற பெயரில் சட்டமானது. இதன்மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ள சட்ட உரிமை கிடைத்தது.
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் சமூக பணியில் பங்களிப்பு:
தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் தங்கிப்படிப்பதற்காக தமது வீட்டில் அவை விடுதி என்ற பெயரில் 1930 ஆம் ஆண்டு ஒரு விடுதியை தொடங்கினார். முத்துலட்சுமி ரெட்டி 1936ல் இந்த இல்லம் மயிலாப்பூரில் ஒரு வாடகை இடத்திற்கு மாற்றப்பட்டு பிறகு அடையாற்றில் மாற்றப்பட்டது. முதலில் தேவதாசி முறையில் இருந்து விடுபட்ட பெண்களுக்கு மட்டும் இருந்த அவ்வை விடுதி. அதன்பிறகு அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லா பெண்களுக்கும் என்று மாற்றப்பட்டது.
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் மருத்துவ பங்களிப்பு:
புற்றுநோயால் இறந்த தமது சகோதரி மூலம் அந்த நோய் தரும் துன்பம், வலி, வேதனை ஆகியவற்றை நேருக்கு நேர் பார்த்து இருந்த டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி புற்றுநோய்க்கு என்று ஒரு மருத்துவமனை கட்ட உறுதி எடுத்தார். இத்தகைய நல் உள்ளம் கொண்டவர்களிடம் நீதி திரட்டியும், இந்திய பெண்கள் சங்கத்தின் உதவியோடும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவினார்.
அதன் பிறகு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை – க்கு பிறகு இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை என்ற பெருமை (சென்னை ) அடையாறில் உள்ள புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் சமூகப்பணி சிறப்புகள்:
* 1926ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி அப்போது அவர் நடத்திய சொற்பொழிவில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேற வேண்டும் பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
* இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்ற பெருமை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு சேரும்.
* சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்ற பெருமை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு சேரும்.
* சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்வானார் முத்துலட்சுமி ரெட்டி அதன்மூலம் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டிக்கு சேரும்.
* 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணை தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி.
* அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க அடையாற்றில் அமைந்துள்ள அவ்வை இல்லத்தை உருவாக்கியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்.
* சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதத்திலும் நிதி திரட்டியவர் இவரே.
* 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரதமர் நேரு அவர்களால் சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
* இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனை அடையாற்றில் உள்ளது இந்த மருத்துவமனையில் சுமார் 80 ஆயிரம் நோயாளிகள் இதுவரை குணப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கை வரலாறு – தமிழ் மகளிர் சிறப்பு
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி பங்கேற்ற ஒழிப்பு முறை சட்டங்கள் :
- தேவதாசி ஒழிப்பு முறை சட்டம்
- இருதார தடைச் சட்டம்
- பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம்
- பால்ய விவாகங்கள் தடை செய்யும் சட்டம்
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி பெற்ற விருதுகள்:
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியின் மகத்தான பணிக்காக இவருக்கு 1956 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்மபூஷன் விருது” கொடுத்து கௌரவித்தது.
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியின் மறைவு:
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1968ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் நாள் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இந்திராகாந்தி, முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு போன்ற பெண்கள் இல்லாமல் போயிருந்தால் நாம் இன்றும் உயர்ந்த இடங்களை பிடித்து இருக்கமுடியாது என்பது நினைவில் அறியத்தக்கது.
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியின் பெயரில் வழங்கப்படும் திட்டங்கள்:
- டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி நினைவு – கலப்பு திருமண உதவித் திட்டம்
- டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி – மகப்பேறு நிதி உதவி திட்டம்
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்:
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டம் என்பது தமிழ்நாடு அரசின் சார்பில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு பேறு காலத்தின் போது ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்யவும், அவர்கள் சத்தான உணவுகளை உண்ண வழிவகை செய்யவும், பேரு காலத்துக்கு முன் இரு மாதங்கள் மற்றும் பின் இரு மாதங்களுக்கு என மொத்தம் நான்கு மாதங்களுக்கு தலா ரூ- 50 வீதம் மொத்தம் ரூ – 200 வழங்க, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் கடந்த 2 – 5 – 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். அதன்படி கடந்த 13-04-1989 ஆண்டு தமிழக அரசின் பிற்பட்டோர் நலம் சத்துணவுத் திட்டம் மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு (அரசாணை நிலை எண் 369) பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
பிறகு 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது இந்த நிதி உதவி 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர் 2006 – 2007 நிதியாண்டு முதல் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் இந்த தொகை 12000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அதன்பிறகு 01- 04- 2018ஆம் ஆண்டு முதல் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி தொகை ரூபாய் 18000 ரூபாயாக உயர்த்தப்பட்டு தற்போது மகப்பேறு உதவித்தொகை 2022 அகவிலைப்படி தமிழ்நாடு அரசு 18000 ரூபாயிலிருந்து 24000 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கி வருகிறது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் தொடர்பான புகார்களுக்கு புகார் அளிக்க – 04286 280111 மற்றும் 04286 280222 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.