Categories
தமிழ் மகளிர் சிறப்பு

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கை வரலாறு – தமிழ் மகளிர் சிறப்பு

பிறந்த ஆண்டு : 1883

மறைந்த ஆண்டு : 1962

பெற்றோர் பெயர்கள்: தந்தை – கிருஷ்ணசாமி மற்றும் தாயார் – சின்னம்மாள்.

பிறந்த ஊர் : பாலூர் (திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது)

வளர்ந்த ஊர் : மூவலூர்

சிறப்புப் பெயர் : தமிழகத்தின் அன்னிபெசன்ட் அம்மையார் (மூவலூர் ராமாமிர்தம்) , மூவலூர் மூதாட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

மூவலூர் ராமாமிர்தம் வாழ்க்கை வரலாறு:

  • கண்களில் நீரோடு தன்னுடைய ஐந்து வயது குழந்தையை   அப்பெண்மணியிடம் ஒப்படைத்து விட்டு அதற்கான விலையாக 10 ரூபாயும், ஒரு பழம் புடவையும் பெற்றுக் கொண்டு சென்றால் அந்த           அபாயக்கியவதி. அம்மா தன்னை எவரிடமும் விட்டு விட்டு செல்கிறாள் என்று கண்களில் குளம் நீரோடு பயந்துபோய் அழுது கொண்டிருந்தது அப்பெண் குழந்தை. தன் வாழ்நாள் முழுமைக்குமான  அத்தனை கண்ணீரையும், பயத்தையும் குழந்தை பருவத்திலேயே செலவிட்டு விட்டதால் தானோ அதனால் இறுதிவரை உறுதியான மனத்தோடு அத்தனை போராட்டங்களையும் மேற்கொண்டு வெற்றி பெற முடிந்தது!
  • கண்ணீரோடு அன்று அந்த தேவதாசிப் பெண்ணுடன் நின்றுகொண்டிருந்த குழந்தைதான் பின்வரும் நாட்களில் மிகப்பெரிய சமூகம் போராட்டம் நடத்தி சக பெண்களின் கண்ணீரை துடைத்து தெரிந்த மேதை தான் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்” ஆவார்.
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வாழ்ந்த காலம் தேவதாசி முறை நடைமுறையில் இருந்த காலகட்டம் ஆகும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை மிக சிறுவயதிலேயே கடவுளுக்கு காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில் கோயில்களுக்கு “நேர்ந்து விட்டுவிடுவார்கள்” அவர்களுக்கு சிறுவயதிலேயே நாட்டியம், பாட்டு போன்றவைகள் கற்றுத்தரப்படும். அவர்கள் நாட்டியமும், இசையும் மட்டுமல்லாது இலக்கியம், கவிதை போன்றவற்றில் சிறந்தவர்களாகவும் பயிற்றுவிக்கப்படுவர்கள். சகல விதத்திலும் தேர்ந்து தங்களது அழகாலும் அறிவாலும் மற்றவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் பயிற்றுவிக்கப்படுவார்கள்.
  • பருவ வயது வந்ததும் அவர்களை ஊர் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊரை மகிழ்விக்கும் நடன பெண்மணிகளாகவும் ஆகியிருந்தது அச்சமூகம். அவர்கள் “பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்” “தேவரடியார்கள் – ஆகவும்” இழிவாக பேசப்படும் பிரிவினராக வகைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். அச்சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களது மகளை அவ்வாறு சிறுமைப்படுத்த விரும்பவில்லை ராமாமிர்தத்தின் பெற்றோர்கள். அதனால் தம் மகளை நாட்டியம், இசை போன்றவற்றை கற்றுக் கொடுக்காமல் வளர்க்க ஆசைப்பட்டனர். மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் தன் முடிவில் இருந்து மாறாமல் இருந்தனர். அதனால் ஊரின் பகைமையை சம்பாதித்துக் கொண்டனர் மூவலூர் ராமாமிர்தத்தின் பெற்றோர்கள். அவர்களை அவர்கள் சமூகமும் கூட விலக்கி வைத்து விட்டது.
  • வருமானத்துக்கும், வாழ்வாதாரத்திற்கும் மிகுந்த பிரச்சினை ஏற்பட்டது மூவலூர் ராமாமிர்தம் குடும்பத்தில்.ஓரளவுக்கு மேல் சமாளிக்க இயலாத கிருஷ்ணசாமி வெறுத்து மேலிட தன் குடும்பத்தை விட்டு விலகி எங்கேயோ போய்விட்டார். கணவனும் இன்றி ஊரின் உதவியும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக ஐந்து வயது பெண் குழந்தையையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையை வாழ்க்கையுடன் போராடினார் சின்னம்மாள். ஓரளவுக்கு மேல் அவரால் சமூகத்துடன் போராட முடியவில்லை வேறுவழியின்றி தன் 5 வயது மகளை (மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்) ஒரு தேவதாசி இடம் பத்து ரூபாய் பணத்துக்கும், ஒரு பழம் புடவைக்கும் விற்று பெற்றார்.
  • அந்த தேவதாசிடம்  தான் வளர்ந்தார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அவர்களின் குல வழக்கமாக ஆடல், பாடல், இசை என இளவயது முதல் கற்றுத்தேர்ந்தாலும் அவரின் மனதில் தாய்,தந்தைக்கு இருந்த என்ன ஓட்டமே இருந்தது. என்ன நடந்தாலும் தான் இந்த தேவதாசி முறைக்கு அடிமையாகக் கூடாது என்பதில் மிகுந்த மன உறுதியோடு இருந்தார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். குழந்தை குமரி ஆனதும் ஆரம்பித்தது வாழ்க்கையின் போராட்டம். தேவதாசி முறைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என அடம் பிடித்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெரும் பணத்திற்காக 80 வயது முதியவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டான் அவரை வளர்த்த தேவதாசி.
  • அங்கே ஆரம்பித்தது ராமாமிர்தம் அம்மையாரின்  போராட்டம் உயிரே போனாலும் தாசியாகவும் மாட்டேன் பாட்டன் வயதில் இருக்கும் கிழவனையும் மணக்க மாட்டேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினார்.தனக்கு இசையும் நாட்டியமும் சொல்லிக்கொடுத்த இளம் வயதினரான சுயம்பு பிள்ளையுடன் தன் வாழ்வை இணைத்துக்கொண்டார்.அப்படியும் சமூகம் அவரை நிம்மதியாக வாழ விடவில்லை. அவரின் மேல் கொலைப்பழி சுமத்தியது. ஒரு இளம்பெண்ணை ராமாமிர்தம் அம்மையார் கொலை செய்து விட்டதாக சொல்லி ராமாமிர்தம் அம்மையார் மீது வழக்கு தொடரப்பட்டது ஆனால் ராமாமிர்தம் அம்மையார் எதற்கும் கலங்கவில்லை. கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட அதே பெண்ணை உயிருடன் அரும்பாடுபட்டு கண்டுபிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். யாரெல்லாம் அந்த சதிக்கு உடந்தை என்பதை அம்பலப்படுத்தி அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தேவதாசி முறை ஒழிப்பு போராட்டம்:

  • கணவரின் துணையுடன் தேவதாசி முறையை ஒழிக்க போராட்டங்களில் ஈடுபட்டார் அம்மையார். 1917இல் மயிலாடுதுறையில் தனது முதல் போராட்டத்தை துவக்கினார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். தேவதாசி குலப் பெண்களை அழைத்து பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இதனால் ஊரில் பலரையும் பகைத்துக் கொண்டார். ஊர் பெரிய மனிதர்களில் இருந்து பணக்காரர், ரவுடிகள், அரசியல்வாதிகள் வரை பலரும் அவருக்கு எதிரிகளாக மாறினர். இருப்பினும் பல இன்னல்களும், துன்பங்களும் அம்மையாருக்கு ஏற்பட்டன.அம்மையாரின் கூந்தலை பிடித்து இழுத்து அழுத்தி விட்டனர் ஒரு பெண்ணை எந்த விதத்தில் எல்லாம் அவமானம் செய்ய முடியுமோ அத்தனை விதத்திலும் செய்தனர் அந்த ஊர் மக்கள். இருப்பினும் அவர் கண்கலங்க நின்றுவிடவில்லை எதிர்ப்புகள் வளர வளர அவரது திடமும் வளர்ந்து மேலும் உத்வேகம் பெற்றது.
  • காந்தியத்தின் மீது மிகவும் பற்று கொண்ட அம்மையார் விடுதலைப் போராட்டங்களின் போது ஆங்கிலேயர் மேடையில் யாரும் பேசக்கூடாது, கூட்டம் கூட கூடாது என்றெல்லாம் கடும் சட்டம் போட்டிருந்தனர். அப்போது அம்மையார் சரி உன் சட்டத்தை நான் மதிக்கிறேன் என்ற பாவனையில் அம்மையார் மேடையில் பேசாமல் தான் சொல்ல வந்த கருத்துக்களை எல்லாம் கரும்பலகையில் எழுதி மக்களை படிக்கச் செய்தார்.  மகாத்மாவை கைது செய்த போது அதை எதிர்த்து மூவர்ணக் கொடியை ஆடையாக அணிந்து போராடியவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆவார்.
  • 1925 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் பெண்களின் அடக்குமுறைக்கும், கைம்மை நோன்பு, பால்ய விவாகம், தேவதாசி முறை, தீண்டாமை ஆகிய பல கொடுமைகளுக்கு எதிராக ராமாமிர்தம் அம்மையார் போராடினார். காங்கிரஸில் இருந்த சிலர் தேவதாசி முறைக்கு ஆதரவாக இருந்ததால் அந்த கட்சியில் இருந்து பெரியார் வெளியேறிய போது தாமும் அவருடன் வெளியேறினார்.
  • தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்டமன்றத்தில் வாதாடிய டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி க்கும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் நல்ல நட்பு இருந்தது.தேவதாசி முறை ஒழிப்பு சட்ட தீர்மானத்தை காங்கிரஸில் இருந்த மூத்த தலைவர்கள் சிலர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்த சட்டத்தை கொண்டுவர தீர்மானம்                               இயற்றியபோது “தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும் இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்திய கலாசாரம் சீரழிந்து விடும்” என்று ஆவேசப் பட்டனர். அப்போது ராமாமிர்தம் அம்மையார் இவ்வாறு கூறும்படி முத்துலட்சுமி ரெட்டியிடம் கூறினார். அவர்கள் தேவதாசி முறை தொடர வேண்டும் என விரும்பினால் இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்துவிட்டனர்.இந்திய பண்பாட்டை காக்க இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும் என்றார். அதைக் கேட்ட தலைவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்  தேவதாசி முறை ஒழிப்பு சட்டத்தின் போது ஏற்பட்ட நிகழ்வுகள்:

  • பல போராட்டங்களுக்கு பிறகு 1947ஆம் ஆண்டு உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானமாய் விளங்கிய  தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவரது போராட்ட காலங்களில் இவர் மீது கொலைக் குற்றங்களும் அபவாதங்களும் சுமத்தப்பட்டன.விஷம் கொடுத்து கொள்ளும் முறை கூட எதிரிகள் போயினர். ஆனால் தன் உயிரையும் துச்சமாக நினைத்து தாம் நினைத்ததை சாதிக்க போராடினார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
  • 1936ம் ஆண்டு தன்னுடைய சுயசரிதை நூலான “தாசிகளின் மோசவலை” அல்லது “மதிகெட்ட மைனர்” என்ற புதினத்தை எழுதி சிவகிரி ஜமீன்தாரின் வெ.வெள்ளத்துரைச்சி நாச்சியார் அவர்களின் உதவியுடன் தாமே வெளியிட்டார். மீண்டும் 65 ஆண்டுகள் கழித்து தான் அந்த நாவல் மறுபதிப்பு செய்யப்பட்டது. அந்த நாவலில் தாசிகளின் பரிதாபமான வாழ்க்கைமுறையும் தன் சொந்த அனுபவங்களையும் முன்னிறுத்தி எழுதி இருந்தார். இதுபற்றி “புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல்” என்று மூவலூர் அம்மையார் கூறியிருந்தார்.
  • மேலும் அவர் “தாசிகளுக்கு புத்திசாலித்தனமாக ஆராய்ந்து அறியும் திறன் கிடையாது” பொருள் தேடும் பேராசையால் யார் எப்படி சொன்னாலும் அப்படியே நடப்பார்கள். ஆனால் எவ்வளவு சாமார்த்தியமாக அவர்கள் பொருள் தேடினாலும் கடைசி காலத்தில் இளிச்சவாய் தனமாய் யார் இடத்திலாவது கொடுத்துவிட்டு கஷ்டப்படுவார்கள்.எந்தத் தாசியாவது கடைசி காலத்தில் சுகமா இருக்கிறாளா? என்று தனது நாவலில் ஓரிடத்தில் வேதனையோடு சொல்லி இருக்கிறார் ராமாமிர்தம் அம்மையார்.
  • சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர். தேவதாசி சமூகத்தில் பிறந்து அதனால் பாதிப்படைந்து அந்த        தளைகளை அறுத்து எரிந்து அந்த கேடு கெட்ட பழக்கத்தை ஒழித்து கட்டும் வரை ஓயாமல் உழைத்தவர் தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.  பெண்கள் வீட்டை விட்டு கூட வெளியே வரமுடியாது இருந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும் தன் தைரியத்தாலும், சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆண்களுக்கு இணையாக பிரச்சாரம் மற்றும் போராட்டம் என நிகழ்த்தி வெற்றி அடைந்து காட்டியவர் தான் மூவலூர் ராமாமிர்தம் மூதாட்டி அம்மையார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கலை உலகில் ஆற்றிய பங்களிப்பு:

  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போராட்டம் மட்டுமல்லாது கலை உலகிலும் தன்னுடைய பங்களிப்பை அளித்து இருக்கிறார். அறிஞர் அண்ணா, சிவாஜி கணேசன், டி.வி.நாராயணசாமி போன்றோர் நடித்த நாடகங்களில் தாயார் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து எழுத்து மூலமும், கலை மூலமும் புரட்சி செய்திருக்கிறார் அம்மையார்.50 ஆண்டுகால பொது வாழ்க்கை வாழ்ந்த அம்மையார் 26.6.1962 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவாக அரசு செய்த மரியாதை:

  • மூவலூர் அம்மையார் வாழும்போது அறிஞர் அண்ணா தன் கையால் தி.மு.க சார்பில் விருது கொடுத்து கவுரவித்தார்.அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால் ஏழை பெண்களுக்கு திருமண உதவி திட்டம் ஒன்றை அறிவித்தார்.அதுவே “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழை பெண்கள் திருமண உதவி திட்டம்” ஆகும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பிறந்த வருடம் – 1883.

2. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சேர்ந்த ஆண்டு – 1925.

3. சென்னை மாகாணத்தில் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆக டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி உடன் துணை நின்று போராடிய ஆண்டு – 1930.

4. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் எழுதிய சுயசரிதை புதினம் – தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்.

5. மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் சுயசரிதம் வெளிவந்த ஆண்டு – 1936.

6. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட ஆண்டு – 1937 முதல் 1940 வரை.

7. இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டதற்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிறை சென்ற ஆண்டு – 1938.

8. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் நினைவாக ஏற்படுத்திய சமூக நல திட்டம் – திருமண நிதி உதவி திட்டம்.

9. அறிஞர் அண்ணா அவர்களால் “தமிழகத்தின் அன்னிபெசன்ட்” எனப் புகழப்பட்டவர் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

10. தமிழகத்தின் அன்னிபெசன்ட் அம்மையார் யார் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

11. பெண் உரிமைக்காக பாடுபட்ட விடிவெள்ளியாக திகழ்ந்தவர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் சீர்திருத்தவாதியாக இருந்தவர் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

12. 1989 ஆம் ஆண்டு கலைஞர் திரு. மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த இளம்பெண்களின் திருமண நிதி தொகை ரூபாய் 5 ஆயிரத்தை மாற்றி  15 ஆயிரம் பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் 2022 கீழ் தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பெண் மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
  • மாணவர்களின் இளங்கலை பட்டப்படிப்பு , டிப்ளமோ, ஐடிஐ, படிப்புகள் முடியும் வரை ஒவ்வொரு மாதமும் அவர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை டெபாசிட் செய்யப்படும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் 2022 தேவையான ஆவணங்கள்:

1. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

2. ஆதார் அட்டை

3. பாலினத்தை காட்டும் அடையாளச் சான்று

4. சாதி சான்றிதழ்

5. குடியிருப்பு சான்றிதழ்

6. சேர்க்கை பதிவு செய்யப்பட்ட ரசீது

7. முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியல்

8. வருமான சான்றிதழ்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தாலிக்கு தங்கம் திருமண உதவி திட்டம் விவரங்கள்:

  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு தாலிக்கு தங்கம் திருமண உதவி திட்டம் 1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு சமூக ஆர்வலர் மூவலூர் ராமாமிர்தம் என்று பெயரிடப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் – ரூபாய் 25 ஆயிரம் திருமண உதவியை பெற்றனர்.
  • 2011 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்படி மாநில அரசு பயனாளிகளுக்கு 4 கிராம் தங்கத்தை வழங்கியது மற்றும் மணமகள் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து இருந்தால் உதவித் தொகையை – ரூபாய் 50 ஆயிரம் ஆக உயர்த்தியது.
  • 2016 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் தங்கத்தின் அளவு 4 கிராமில் இருந்து தங்கத்தின் அளவு 8 கிராம் ஆக உயர்த்தப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி செய்த போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் திட்டத்தை பெண்களின் உயர்கல்வி அளவிலான கல்வியை முடிப்பதற்கும், பெண்களை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டமாக மறுசீரமைக்கப்பட்டது” என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *