வீரமாமுனிவர் பிறந்த ஆண்டு : நவம்பர் 8, 1680.
வீரமாமுனிவர் இறந்த ஆண்டு: பிப்ரவரி 4, 1747.
இயற்பெயர் : கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி.
வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாறு:
இத்தாலி நாட்டில் உள்ள “கேசுதிகிலியோன்” எனுமிடத்தில் பிறந்த வீரமாமுனிவர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த “இத்தாலியத் செந்தமிழ் வித்தகர்”என்ற பெருமைக்கு உரியவர் தான் வீரமாமுனிவர்.
வீரமாமுனிவர் இயேசு சபையை சேர்ந்த குரு ஆவார். இவர் கிருத்துவ மதத்தை பரப்பும் நோக்கில் 1709 ஆம் ஆண்டு இயேசு சபையில் குருவான பின் 1710 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அதாவது அவரது 30ஆம் வயதில் வந்தடைந்தார்.
இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இருபத்தி மூன்று நூல்களை தமிழில் எழுதியதுடன், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய “புனித யோசேப்பின்* வரலாற்றையும் தமிழ் பண்பாட்டுக்கு ஏற்ப “தேம்பாவணி” என்ற பெருங் காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
வீரமாமுனிவர் “சுப்பிரதீபக் கவிராயர்” மூலம் தமிழ்ப் புலமை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரமாமுனிவரின் தமிழகத்திற்கு ஆற்றிய தமிழ் தொண்டு :
வீரமாமுனிவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 ஆம் ஆண்டு ஜூனில் கிருத்துவ மத பரப்பு பணிசெய்ய கோவா வந்து அடைந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களை கட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் முகாசபரூர் பாளையங்காரரின் உதவிகொண்டு புனித பெரிய நாயகி அன்னைக்கு திருத்தலம் கட்டி எழுப்பியவர் வீரமாமுனிவர். “கோணான்குப்பம்” புனித பெரியநாயகி அன்னைக்குத் தமிழ் கலாச்சாரப்படி அன்னைக்கு புடவை உடுத்தியபடி மரத்தாலான சுரூபங்களை செய்து அன்னைக்கு பெருமையும், புகழும் உலகறியச் செய்துள்ளவர் வீரமாமுனிவர்.மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், ஆவூர் கிராமத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம், கடலூர் மாவட்டம் கோனான்குப்பம் கிராமத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் ஆகியவற்றை கட்டியுள்ளார்.
வீரமாமுனிவர் கட்டி உள்ள அனைத்து ஆலயங்களும் ஒரே வடிவில் இருக்கிறது. மேலும் இவர் கட்டியுள்ள ஆலயத்திற்குள் 50 பேர் மட்டுமே அமர முடியும்.
வீரமாமுனிவர் மொழிபெயர்த்துள்ள நூல்கள்:
1. திருக்குறளில் அறத்துப் பாலையும், பொருட் பாலையும் லத்தின் மொழியில் மொழிபெயர்த்தார்.
2. வேதியர் ஒழுக்கம் – தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வீரமாமுனிவர் எழுதிய (இயற்றிய இலக்கண) நூல்கள்:
1. தொன்னூல் விளக்கம் (குட்டி தொல்காப்பியம்)
2. செந்தமிழ் இலக்கணம்
3. கொடுந்தமிழ் இலக்கணம்
4. இலக்கண திறவுகோல்
வீரமாமுனிவர் எழுதிய (இயற்றிய செய்யுள்) நூல்கள்:
1. திருக்காவலூர் கலம்பகம்
2. கித்தேரியம்மாள் அம்மானை
3. அடைக்கல மாலை
4. அடைக்கல நாயகி வெண்கலிப்பா
வீரமாமுனிவர் எழுதிய (இயற்றிய உரைநடை) நூல்கள்:
1. வேத விளக்கம்
2. வேதியர் ஒழுக்கம்
3. ஞானக்கண்ணாடி
4. பரமார்த்த குருவின் கதை (தமிழில் முதன் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம்)
5. வாமன் கதை
வீரமாமுனிவர் இயற்றிய தமிழ் பற்று காவிய நூல் :-
“தேம்பாவணி – வீரமாமுனிவர்”. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆன இந்த காவியம் இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது என்னவென்றால் இதில் பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார்.
தமிழில் அமைந்த காப்பியங்களில் தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை “தேம்பாவணி” என்ற நூலுக்கு உண்டு. மேலும் வீரமாமுனிவர் போல வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்களை படைக்கவில்லை.
வீரமாமுனிவரின் சிறப்பு (புனைப்) பெயர்கள்:-
1. தமிழ் அகராதியின் தந்தை
2. உரைநடையின் தந்தை
3. தமிழ் மறுமலர்ச்சி உரைநடையின் தந்தை
4. தமிழுக்கு அகரமுதலி தந்த வித்தகர்
5. இத்தாலிய செந்தமிழ் வித்தகர்
6. தமிழ் உரைநடையின் முன்னோடி