தூது பெயர் காரணம் & தூது என்றால் என்ன:
ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணை பொருட்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்கு தூது இலக்கியம் எனப் பெயர் ஏற்பட்டது.
தூது இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்:
எல்லா இலக்கிய வகைகளையும் போலவே தூது இலக்கியம் இலக்கணம், இலக்கியம் ஆகிய நூல்களில் காணப்படும் சுருக்களிலிருந்து வளர்ச்சி அடைந்து தனி இலக்கிய வகையாக தோன்றியுள்ளது. இவ்வகையில் தூது இலக்கிய வகையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் காணலாம்.
தொல்காப்பியத்தில் தூது இலக்கியத்தின் வளர்ச்சி:
தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு நிகழ்வதற்கு உரிய காரணங்கள் கூறுகின்றார். கல்வி கற்கும் பொருட்டு செல்லுதல், மன்னனின் பகைவர்கள் மேல் போர் தொடுத்து செல்லுதல், தூது செல்லுதல் ஆகிய காரணங்களுக்காக தலைவன் செல்வான்.அப்போது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். இந்த இடத்தில் தூது செல்லுதல் பற்றி குறிப்பு உள்ளது.
தூதாக செல்வதற்கு உரியவர்களை தொல்காப்பியர் வாயில்கள் என்று கூறுகின்றார்.
இலக்கியங்களில் தூது இலக்கியத்தின் வளர்ச்சி:
இலக்கியங்களிலும் போது பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன சங்க இலக்கியங்களில் அகப்பொருள் நிலையிலும், புறப்பொருள் நிலையிலும் தூதுச் செய்திகள் அமைவதைக் காணலாம்.
தூது இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக மற்றும் சிறப்புகள்:
அதியமான் என்ற மன்னனுக்கு அவ்வையார் என்ற புலவர் தொண்டைமான் என்ற அரசனிடம் போர் மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காக தூது சென்றதாக புறநானூற்றுப் பாடல் (95) ஒன்று உள்ளது. இதை புறப்பொருள் சார்பான தூதுக்கு சான்றாகக் கூறலாம்.
திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற ஒரு தனி அதிகாரமே அமைத்துள்ளார். இப்பகுதியில் தூது செல்பவர்களின் பண்புகள், தூது செல்பவர்களின் இலக்கணம், தூது சொல்லும் முறை முதலியவற்றை கூறக் காணலாம்.
பக்தி இலக்கியம் ஆகிய திருமுறைகளிலும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தலைவனாகிய இறைவனிடம் அன்பு கொண்ட தலைவி தூது அனுப்புவதாக அமைந்த பாடல்கள் உள்ளன.
காப்பியங்கள் ஆகிய கம்பராமாயணம், சீவகசிந்தாமணி ஆகியவற்றிலும் தூதுச் செய்திகள் காணப்படுகின்றன.
கம்ப ராமாயணத்தில் அனுமன் தூது காணப்படுகிறது. சீவக சிந்தாமணியில் சீவகனிடம் குணமாலை கிளியை தூது அனுப்பும் செய்தி இடம் பெற்று இருக்கிறது. இவ்வாறு இலக்கணத்திலும், இலக்கியங்களிலும் இடம்பெறும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தூது என்ற தனியான ஓர் இலக்கியம் தோன்றியது எனலாம்.
முதல் தூது இலக்கிய நூல்:
தூது இலக்கிய வகையின் முதல் நூல் நெஞ்சுவிடு தூது என்ற நூலாகும். இதனை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார். இவர் காலம் கிபி 14ஆம் நூற்றாண்டு எனலாம். தமது ஞானாசாரிடம் சென்று தமது குறைகளை எடுத்துக் கூறுமாறு உமாபதி சிவாச்சாரியார் தமது நெஞ்சை தூது விடுகிறார்.இந்நூலைத் தொடர்ந்து பல நூல்கள் இயற்றப்பட்டன. இப்போது 300 க்கும் மேற்பட்ட தூது நூல்கள் உள்ளன.
தூது நூல் வகைகள்:
தூது அனுப்புவோர், தூது பெறுவோர் ஆகிய அடிப்படையில் தூது நூல்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம் அவைகள் பின்வருமாறு:
1. ஆடவர் ஆடவர்க்குத் தூது அனுப்பும் நூல்கள்.
2. ஆடவர் பெண்களுக்குத் தூது அனுப்பும் நூல்கள்.
3. பெண்கள் ஆடவர்க்குத் தூது அனுப்பும் நூல்கள்.
தூது வகைகள்:
தூது வகைகள் மொத்தம் 150க்கும் மேற்பட்ட தூது நூல்கள் உள்ளன இப்பகுதியில் ஒரு சில தூது வகைகள் பற்றி காணலாம்.
1. நெஞ்சு விடு தூது
2. தமிழ்விடு தூது
3. அன்னம் விடு தூது
4. மேகவிடு தூது
5. காக்கை விடு தூது
6. பழையது விடு தூது
7. மான் விடு தூது
8. கிள்ளை விடு தூது
தூதுவிடும் பொருட்கள்:
உயர்திணை: தோழி, விறலி.
அஃறிணை: அன்னம், மயில், கிளி, வண்டு, பூ ,மான் நெல்,
மற்றவை: முகில் (மேகம்), தென்றல், பணம், தமிழ், நெஞ்சம்.