Categories
Uncategorized

பரிதிமாற்கலைஞர் – தமிழ் மொழியின் வரலாறு பற்றிய முக்கிய தகவல்கள்….

 பரிதிமாற் கலைஞர் (06-07-1870 முதல் 02- 11-1903 வரை வாழ்ந்தார்).

 


1. பரிதிமாற்கலைஞர் எனப்படும் வீ.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்கள் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவராக திகழ்ந்தார்.

2. சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என தனித்தமிழ் ஆக்கிக் கொண்டவர் .

3. இவர் மதுரையை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.

பரிதிமாற் கலைஞர் பெற்றோர் பெயர்:

தந்தை கோவிந்த சிவன் மற்றும் தாயார் லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது மகனாக 1870 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திங்கள் ஆறாம் தேதி பிறந்தார்.

 

கல்வி:

1. வடமொழியை தந்தை யாரிடமும், தமிழை மதுரை சபாபதி முதலியார் இடமும் கற்றறிந்தார்.

2. இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் மொழியிலும் மற்றும் மெய்யியலிலும்  மாநிலத்திலேயே முதலாவதாக தேறினார்.

3. தமிழ் மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் உட்பட பல நூல்களை எழுதியவர்.

 

இயற்றமிழ் மாணவர்:

தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்த உடன் அவர்களை “இயற்றமிழ் மாணவர்” என பெயரிட்டு அழைத்தார்.

 

மதுரை தமிழ்ச்சங்கத்தில் பங்களிப்பு:

1. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.

2. பாஸ்கர சேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற் கலைஞர், உ. வே.  சாமிநாதர், ராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரை தமிழ் சங்கம் நிறுவப்பட்டது.

 

திராவிட சாஸ்திரி என்ற பட்டம் பெற்றது:

யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை பரிதிமாற்கலைஞரின் தமிழ் புலமையும், கவி பாடும் திறனையும் கண்டு “திராவிட சாஸ்திரி” எனும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்.

 

தனிப்பாசுரத்தொகை:

1. பரிதிமாற்கலைஞர் தாம் இயற்றிய “தனிப்பாசுரத்தொகை” எனும் நூலில் பெற்றோர் இட்ட பெயரான சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை மாற்றி தமிழில் பரிதிமாற் கலைஞர் எனும் தனித்தமிழ் பெயரை சூட்டிக்கொண்டார்.

2. இந்நூலினை ஜி. யு .போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பரிதிமாற்கலைஞர் கம்பராமாயண உவமை பற்றி கூறியதாவது:

1. பரிதிமாற் கலைஞர் சென்னை கிருத்துவக் கல்லூரியில் படித்தபோது நடந்த நிகழ்வு என்னவென்றால் கல்லூரி முதல்வரும், ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் பற்றிய ஆர்தரின் இறுதி” என்னும் நூலில் இருந்து ஒரு பாடலில் “படகின் துடுப்பு அன்னப் பறவைக்கு” உவமையாகக் கூறப்பட்டது.

2. தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா என அவர் கேட்க பரிதிமாற்கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள “விடுநனி கடிது” எனும் பாடலை பாடி பொருள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழின் சிறப்பை உணர்தல்:

 


1. வடமொழியும், தமிழ்மொழியும் கலந்து எழுதுவது என்பது தமிழ் மணியோடு பவளத்தை போல செந்நிறம் உடையதான மிளகாய்ப் பலம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற் கலைஞர் கருத்து.

2. தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு மணிப்பிரவாள நடை எரிச்சலைத் தான் தரும் என்பதனை உணர்ந்த பரிதிமாற் கலைஞர் வடசொல் கலப்பைக் கண்டித்தார்.

 

பரிதிமாற்கலைஞரின் தமிழ்த்தொண்டு:

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பரிதிமாற் கலைஞர் நடத்திய இதழ்:

1. மு. சி .பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த “ஞானபோதினி” எனும் இதழை பரிதிமாற்கலைஞர் நடத்தினார்.

2. மும்மொழிப் புலமை உடையவர் ஆக திகழ்ந்தார்.

3. மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரின் “செந்தமிழ் இதழில்” உயர்தனி செம்மொழி எனும் தலைப்பில் தமிழின் அருமை, பெருமைகளை விளக்கி அரியதொரு கட்டுரை வரைந்தார்.

தமிழ்மொழி “உயர்தனிச் செம்மொழி” என முதன் முதலாக நிலைநாட்டியவர் பரிதிமாற்கலைஞர் ஆவார்.

 

பரிதிமாற்கலைஞர் இயற்றிய நூல்கள்:

* ரூபாவதி (நாடக நூல்)

* கலாவதி (நாடக நூல்)

* மான விஜயம்

* தனிப்பாசுரத் தொகை

* பாவலர் விருந்து

* மதிவாணன்

* நாடகவியல்

* தமிழ் வியாசங்கள்

* தமிழ் மொழியின் வரலாறு

* சித்திரகவி விளக்கம் 

* சூர்ப்பநகை – புராண நாடகம் 

1. கலாவதி ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. தமிழக அரசு இவரது மரபு உரிமையாளர்  19 பேருக்கு ரூபாய் 15 லட்சம் பரிசு தொகையாக அளித்து இவரது 13 நூல்களும் 2006ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாளன்று தமிழக அரசால் அரசுடைமை ஆக்கப்பட்டன.

 

பரிதிமாற்கலைஞர் பதிப்பித்த நூல்கள்:

* ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)

* மகாலிங்கயார் எழுதிய இலக்கண சுருக்கம் (1898)

* புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)

* உத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)

* தனிப்பாசுரத் தொகை (1901)

 

பரிதிமாற்கலைஞரின் செம்மொழிக் காலக்கோடு சிறப்புகள்:

1. 1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்க இதழான “செந்தமிழ்” பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது.

2. 1918ஆம் ஆண்டு மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டிய தீர்மானம் நிறைவேற்றி அதை இந்திய அரசுக்கும், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வற்புறுத்தியது.

3. 1918ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. 1919 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது.

5. 1966 ஆம் ஆண்டு உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் தேவநேயப் பாவாணரால் எழுதி வெளியிடப்பட்டது.

6. 2004ஆம் ஆண்டு நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது.

 

பரிதிமாற்கலைஞரின் ஆங்கில சொல்லாக்கங்கள்:

* Aesthetic – இயற்கை வனப்பு.

* Biology – உயிர் நூல்

* Classical language – உயர்தனிச் செம்மொழி

* Green rooms – பாசறை

* Instinct – இயற்கை அறிவு

* Order of nature – இயற்கை ஒழுங்கு

* Snacks  – சிற்றுண்டி 

 

பரிதிமாற் கலைஞர் நினைவில்லம்:

1. மதுரை மாவட்டம் விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் பிறந்து வாழ்ந்த இல்லத்தை தமிழ்நாடு அரசு ரூபாய் 7.90 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து நினைவில்லமாக மாற்றி அக்டோபர் 31 2007 ஆம் ஆண்டு திறந்து வைத்தது. 

2. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது நினைவு இல்லத்தில் ஜூலை திங்கள் (JULY – 6) ஆறாம் நாளன்று பரிதிமாற் கலைஞரின் பிறந்தநள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

பரிதிமாற் கலைஞரின் மறைவு:

1. 1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் (2nd) இரண்டாம் நாள் பரிதிமாற்கலைஞர் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

2. முப்பத்தி மூன்று ஆண்டுகளே வாழ்ந்த இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுந்துள்ளது ஆளுமைக்கு சான்றாகும்.

என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் – நான்.

ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ் பரிதி அகன்றானே.

என்ற பாடலை வருந்திப் பாடினார். 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *